உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கர், பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையில், பாலியல் வழக்கை 45 நாட்களில் விசாரித்து முடிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கர் தன்னை பாலியல் கொடுமை செய்ததாக 2017-ஆம் ஆண்டு புகார் அளித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் பயணம் செய்த கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
புகார் கொடுத்த பெண்ணும் அவரது வழக்கறிஞரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. விபத்து தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் உட்பட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில், அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதால் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.
இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சிபிஐ இணை இயக்குனர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது உன்னாவ் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றுவதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். விபத்து வழக்கை விசாரித்து முடிக்க சிபிஐ 30 நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில், 7 நாளில் விசாரணையை முடிக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத 2 பெண் காவலர்கள் உட்பட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் உத்தர பிரதேசத்தில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை, உறவினர்கள் சம்மதத்துடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றலாம் என்றும் பாலியல் வழக்கை தினந்தோறும் விசாரித்து 45 நாட்களில் முடிக்க வேண்டும் என சி.பி.ஐ க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், பெண்ணின் வழக்கறிஞருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Discussion about this post