கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவிக்கவுள்ளது
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் சமீபத்தில் ராஜினமா செய்தனர். ஆனால், அவர்களது ராஜினாமா குறித்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் முடிவு எடுக்காமல் உள்ளார். இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அங்கிருந்து முதலில் 10 பேரும், பின்னர் 5 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், தங்களது ராஜினாமா குறித்து சபாநாயகர் விரைவில் முடிவெடுக்க உத்தரவிடக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக செவ்வாயன்று ஆஜரான அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, சபாநாயகர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாகவும், அவரை உடனடியாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். எனினும், சபாநாயகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது என்று கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி , இருதரப்பினருக்கு பாதகமில்லாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டார். இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது
Discussion about this post