டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மூச்சுத் திணறலால் அவதியடைந்து வருகின்றனர்.
அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களில் அறுவடை முடிந்து விவசாயிகள் வைக்கோலைத் தீவைத்து எரிப்பதாலும், தொழிற்சாலைப் புகை, வாகனப் புகை ஆகியவற்றாலும் டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது. இத்துடன் பனிமூட்டமும் சேர்ந்துள்ளதால் பார்வைப் புலப்பாடு மிகவும் குறைந்துள்ளது. இதனால் பகல்நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. புகைமூட்டத்தால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஆகிய இன்னல்களுக்கு உள்ளாகும் மக்கள், காற்று மாசை வடிகட்டும் முகமூடிகளை அணிந்தபடியே வெளியே செல்கின்றனர். டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலத் தலைமைச் செயலர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் கட்டுப்பாட்டை மீறிக் கட்டுமானப் பணிகளிலோ, கட்டட இடிப்புப் பணிகளிலோ ஈடுபடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், கழிவுகளை எரிப்பவர்களுக்கு ஐயாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post