உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படியே ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் தமிழகத்தில் தொகுதி மறுவரையறை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் , இட ஒதுக்கீடு தொடர்பான நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அதுவரை உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

தமிழக அரசு மற்றும் தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், இட ஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் சரியாக கடைபிடிக்க படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.அதே போன்று, பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடும், பட்டியல் இனத்தவருக்கு, அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 2011ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திமுக உள்ளிட்ட மற்ற தரப்பு மனுக்களை விசாரிக்க தேவையில்லை எனவும், அந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் 2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படியே ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மேலும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

 

Exit mobile version