சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில், ரயில்களில் வன்முறையில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என ரயில்வே காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே காவல்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 8 கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ரயில்வே காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் வழங்கப்படும் தண்டனைகள் குறித்து விளக்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாணவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும், மாணவர்களின் அரசு வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் பறிபோகும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.