இலங்கையில், உத்தேச தனியார் பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட, மாணவர்கள் மீது கலவர தடுப்பு பிரிவினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர்.
இலங்கை அரசு உத்தேச தனியார் பல்கலைக்கழக சட்டத்தை கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள், தலைநகர் கொழும்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பேரணியாக உருவெடுத்தது. ரயில் நிலையத்திலிருந்து அதிபர் செயலகம் அமைந்துள்ள லோட்டஸ் வீதியை நோக்கி மாணவர்கள் பேரணி சென்றனர். காவல்துறை அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி மாணவர்கள் செல்ல முயன்றனர். இதையடுத்து கலவர தடுப்பு பிரிவினர், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மாணவர்களை விரட்டியடித்தனர். இதனால் அந்த இடமே கலவர பூமியாக மாறியது.