சென்னை அண்ணா சாலை அருகே நடைபாதையை ஆக்கிரமித்து பங்க் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர் அந்தப் பகுதியை கடந்து செல்பவர்கள்.
சென்னை எழும்பூரில் உள்ள அண்ணாசாலை மற்றும் பாந்தியன் சாலையை இணைக்கும் 2 கிலோமீட்டர் சாலையில் உள்ள நடைபாதையை ஆக்கிரமிக்கும் வகையில் பங்க் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில்தான் ஸ்பென்சர் பிளாசா, தாஜ் கன்னிமரா ஹோட்டல், காயிதே மில்லத் மற்றும் எத்திராஜ் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனால் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் என பலரும் இந்த சாலையோர நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பங்க் கடைகள் இந்த நடைபாதைகளை ஆக்கிரமித்திருப்பதால் அவர்கள், சாலையில் இறங்கி செல்லும் நிலை நிலவுகிறது. இதனால் விபத்துகளில் சிக்கும் அச்சம் நிலவுகிறது.
நடைபாதையில் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருபவர்கள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்றிருப்பதாக கூறினாலும், உரிய சான்றிதழ் வைத்து இருக்கிறார்களா என்பது சந்தேகமே. அப்படியே உரிய அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அவர்கள் விதிமீறல்களி ஈடுபடுவதை, மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின்னணி என்ன என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பான வகையில் சாலையோரம் நடந்து செல்ல வழி ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், விதிமீறிய ஆக்கிரமிப்பு எனில் அதனை ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் அதனை அகற்றத் தவறிய அலட்சிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இப்பகுதியில் பயணிக்க கூடியவர்களின் கோரிக்கையாக உள்ளது.