தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனத்துக்கு தொடக்க நிதியாக 10% அரசு வழங்கும்: முதல்வர்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில், மேலும், 2 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நியூயார்க்கில் நேற்று நடந்த தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பல்வேறு நிறுவனங்களுடன் 2,780 கோடி அளவிற்கு முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது, “யாதும் ஊரே” எனும் தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

நியூயார்க் பயணம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோ நகருக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விமான நிலையத்தில் அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோவில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலீட்டாளர்கள் கூட்டத்தில், Lincoln Electric, Caldon Biotech, ZL Technologies உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் TIE Global, Google X உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என 16 நிறுவனங்களுடன் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின.

தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களுக்கு உறுதுணையாக தமிழக அரசு எப்போதும் இருக்கும் என்று கூறிய, முதல் முறை தொழில் தொடங்குவோரை ஈர்க்கும் வகையில், தொடக்க நிதியில் 10 சதவீதம் தமிழக அரசே வழங்கும் என்று அறிவித்தார்.

முதலமைச்சரில் அமெரிக்க பயணத்தின் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியதுடன், 5 ஆயிரத்து 80 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளன. புதிதாக போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், தமிழகத்தை சேர்ந்த 26 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

 

Exit mobile version