நிமிடத்திற்கு நிமிடம் வார்த்தைகளை மாற்றி பேசுபவர் தான் ஸ்டாலின் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதலமைச்சர், தம்மை விவசாயி என்ற கூறிக் கொண்டால், ஸ்டாலினுக்கு கோபம் வருவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். கட்சி நிர்வாகிகளின் பேச்சை கேட்டு, ஸ்டாலின் வயலில் இறங்கி வழுக்கி விழுந்தது போல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் வழுக்கி விழுவார் என விமர்சித்தார். விவசாயியான தம்முடன் ஸ்டாலின் வயலில் இறங்கி மண்வெட்டி பிடித்து ஈடுகட்ட முடியுமா? என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படாது என முதலில் கூறிய ஸ்டாலின் தற்போது, அவருக்கு சேப்பாக்கம் தொகுதி வழங்கியிருப்பது தொண்டர்களை ஏமாற்றும் வேலை என முதலமைச்சர் குற்றம்சாட்டினார். நிமிடத்திற்கு நிமிடம் வார்த்தைகளை மாற்றி பேசும் ஸ்டாலினுக்கு தலைமை பண்பு எப்போதும் வராது எனவும் முதலமைச்சர் விமர்சனம் செய்தார்.
பழநி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து வாக்குசேகரித்த முதலமைச்சர், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற ஸ்டாலின் குறுக்குவழியை தேடுவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ஆணவ போக்கால், வரும் தேர்தலுடன் திமுக சகாப்தம் முடியும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மக்களின் கோரிக்கைகளை ஏற்று, பழநி தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
அதிமுக ஆட்சி மீண்டும் மலர்ந்ததும், பழநி – பச்சையாறு அணை திட்டம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
Discussion about this post