மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் சூறாவறி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பவானியில் வாக்கு சேகரிக்க சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அதிமுக ஆட்சியில் குறை சொல்ல ஒன்றும் இல்லாததால், ஸ்டாலின் திட்டமிட்டு பொய் அறிக்கைகளையும், பொய் குற்றசாட்டுகளை முன்வைப்பதாக கூறினார்.
மக்கள் கிராம சபை என்று கூட்டம் நடத்தி, பொய்களை சொல்லி, மக்களை ஸ்டாலின் ஏமாற்றி வருவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக வாக்கு சேகரிக்க வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் கூடி இருந்த பொதுமக்களை பார்த்து கைகளை அசைத்து வரவேற்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
அதைதொடர்ந்து, பவானியில் உள்ள சிறுகுறு தொழில் முனைவோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது பேசிய முதலமைச்சர் சிறுகுறு தொழில் முனைவோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய முயற்சி மேற்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அடுத்ததாக அந்தியூர் பகுதியில் வாக்கு சேகரிப்புக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மக்கள் வெள்ளத்தின் இடையே உரையாற்றிய முதலமைச்சர், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு திகழ்வதாக பெருமிதத்துடன் கூறினார். அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார்.
Discussion about this post