மீண்டும் மீண்டுமா? 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் பாஸ்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்தாண்டும் மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவ, மாணவிகளில், 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த தேர்ச்சி விகிதமான 91 புள்ளி 39 சதவீதத்தில், மாணவர்களை விட மாணவியர்கள் 6 புள்ளி 5 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாட வாரியாக தேர்ச்சியில், தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத்தில் 95 புள்ளி 55 சதவீதமும், ஆங்கிலத்தில் 98 புள்ளி 93 சதவிதமும், கணிதத்தில் 95 புள்ளி 54 சதவீதமும், அறிவியலில் 95 புள்ளி 75 சதவீதமும், சமூக அறிவியலில் 95 புள்ளி 83 சதவீதமும் மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.

10 ஆம் வகுப்பில் பாட வாரியாக நூறு சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 89 மாணவர்களும், கணிதத்தில் 3 ஆயிரத்து 649 மாணவர்களும், அறிவியலில் 3 ஆயிரத்து 584 மாணவர்களும், சமூக அறிவியலில் 320 மாணவர்களும் நூறு சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 7 ஆயிரத்து 502 மேல்நிலைப் பள்ளிகள், 5 ஆயிரத்து 136 உயர்நிலை பள்ளிகள் என மொத்தமாக 12 ஆயிரத்து 638 பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 718 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. குறிப்பாக ஆயிரத்து 26 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

தமிழகத்தில் அரசு பள்ளிகள் 87 புள்ளி 45 சதவீதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 92 புள்ளி 24 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 97 புள்ளி 38 சதவீதமும், இருபாலர் பள்ளிகள் 91 புள்ளி 58 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94 புள்ளி 38 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 83 புள்ளி 25 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version