பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வானது தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று ஏப்ரல் 10 ஆம் தேதி ஆங்கிலப் பொதுத்தேர்வினை மாணவர்கள் எழுதினார்கள். இதில் ஆங்கில வினாத்தாளில் சில குளறுபடிகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முதல் பகுதியில் இருக்கும் ஒன்று முதல் ஆறு வினாக்களில் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதாவது முதல் ஆறு கேள்விகளில் முதல் மூன்று இணைச்சொல்லாகவும் (synonyms), அடுத்த மூன்று எதிர்ச்சொல்லாகவும் (Antonyms) இருக்க வேண்டும் என்பதே அதிகாரப்பூர்வ வினாத்தாளின் வடிவம். ஆனால் நேற்றைய வினாத்தாளில் ஆறு கேள்விகளுமே இணைச்சொல்லாக (synonyms) கொடுக்கப்பட்டிருந்தன.
பள்ளிகள் கோரிக்கை :
இந்த குளறுபடியால் மாணவர்கள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகினர். ஒரு சில பள்ளி தேர்வு கண்காணிப்பாளர்கள் மாணவர்களை 4,5,6 ஆகிய கேள்விகளுக்கு எதிர்ச்சொல் எழுதும்படி சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சில பள்ளிகளில் உள்ள தேர்வு கண்காணிப்பாளர்கள் இணைச்சொல்லே ஆறு கேள்விகளுக்கும் எழுதுங்கள் என்று சொல்லியுள்ளார்கள். இதனால் மிகுந்த குழப்பத்தில்தான் மாணவர்கள் தேர்வினை எழுதி முடித்துள்ளார்கள். மேலும் இத்தகைய குளறுபடியால் விடைத்தாள் திருத்தும்போது 4,5,6 ஆகிய கேள்விகளுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று பள்ளிகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மெத்தனம் :
இது குறித்து அரசுப் பொதுத்தேர்வு உயர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, “இந்தத் தகவல் தங்களுக்கு கிடைத்தது. மேலும் வினாத்தாளில் எந்தவிதமான தவறும் கிடையாது. தற்போது தேர்விற்கு என்று எந்தவித புளூப்ரிண்ட்டும் இல்லை, அதனால் இணைச்சொல், எதிர்ச்சொல் கட்டாயம் கேட்க வேண்டும் என்கிற நிபந்தனை இல்லை. ஆறு கேள்விகளும் இணைச்சொற்களாக கேட்க வழிவகை உள்ளது” என்று தெரிவித்தனர்
இவர்களின் இந்த மெத்தனப் போக்கான கருத்து மாணவர்களிடையேயும் மாணவர்களின் பெற்றோர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகல்வித் துறை அதிகாரிகளின் இத்தகையப் பேச்சு என்பது கண்டிக்கத்தக்கது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.