இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பில் ஈடுபட்டனர். இதில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டவர்கள் உள்பட ஏராளமானோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 8 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக 40 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தீவிரவாதியின் வீடியோ வெளியாகி உள்ளது. நீர்க்கொழும்பில் உள்ள செபஸ்தியார் தேவாலயத்திற்குள் முதுகில் வெடிகுண்டு பையுடன் அந்த தீவிரவாதி நுழையும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.