இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 262 ஆக உயர்வு

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 262 பேர் பலியாகியுள்ளனர்.

கொழும்பில் உள்ள புகழ் பெற்ற கொச்சிகடை அந்தோணியார் தேவாலயம், மட்டக்களப்பு கட்டுவாபிட்டியா தேவாலயம், நீர் கொழும்பில் உள்ள தேவாலயம், கிங்ஸ் பெர்ரி, சான் கிரில்லா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களில், ஈஸ்டர் பண்டிகையையொட்டி, கூட்டம் நிரம்பி வழிந்தது.

அப்போது அடுத்தடுத்து வெடித்த குண்டுகளால், பலர் உடல் சிதற தூக்கி எரியப்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 262 ஆக உயர்ந்துள்ளது.

தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் யார் என்ற விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதே போல் சமூக வலைதளங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்திய தூதரகத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version