கப்பலுக்குள் திருமணம், கடலுக்குள் திருமணம் என்று டிசைன் டிசைனாக திருமணத்தை வித்தியாசமாக பிளான் செய்யும் ஜோடிகளுக்கு ஆகாயத்தில் திருமணம் செய்வதற்கு ஆப்ஷன் கொடுத்திருக்கிறது ஒரு நிறுவனம்..! ஆனால் விலை தான் சற்று தலை சுற்றும்..!
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்”, கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார்” என திருமணம் குறித்து பல பழமொழி உண்டு. அந்த காலத்தில் சம்ரதாயங்கள் எதுவும் விடாமல் பார்த்து பார்த்து ஒரு திருமணத்தை நடத்த படாதபாடு படுவார்கள் தம்பதியின் வீட்டார்கள். ஆனால் நவீன காலகட்டத்தில் திருமணம் எங்கு, எப்போது, எப்படி நடக்க வேண்டும் என்பதை தாங்களே களத்தில் இறங்கி முடிவெக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது ஒரு சம்பிரதாயம் என்பதைத் தாண்டி ஒரு ஆடல், பாடல், வெட்டிங் போட்டோகிராஃபி, கப்புள் ரீல்ஸ் என ஒரு பேக்கேஜாக மாறியுள்ளது. இளைய தலைமுறையிடம் தங்கள் திருமணத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார் போல் தற்போது ஒரு லட்சம் அடி உயரம் சென்று ஆகாயத்தில் திருமணம் செய்யும் முறையைத் தனியார் நிறுவனம் ஒன்று வழங்க உள்ளது.
கார்பன் நியூட்ரல் பலூன்களில் இணைக்கப்பட்ட பிரத்யேக கேப்ஸ்யூல்களில் தம்பதிகள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேன் பாய்ண்டர் தெரிவித்துள்ளார். இதற்கு கட்டணமாக ரூ.1 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய முறையில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகள் இந்த கார்பன் நியூட்ரல் பலூன் ஒன்றில் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். இந்த ராட்சத பலூனில் பல்வேறு இடங்களில் அதிக ஜன்னல்கள் உள்ளன. பூமியிலிருந்து ராட்சத பலூனில் கிளம்பும் ஜோடிகள் சரியாக ஒரு லட்சம் அடி உயரத்திற்குச் சென்றதும் விண்வெளியில் இருந்தபடி பூமியின் இயற்கை அழகைக் கண்டு களிக்கலாம். அப்படி ரசித்துக்கொண்டே திருமணம் செய்து கொள்ளலாம்.
திருமணம் நடந்து முடிந்ததும் திருமண தம்பதிகள் மீண்டும் பூமிக்குக் கொண்டுவரப்படுபவர். இந்த புதிய விண்வெளி திருமணம் முறைக்கு ஏற்கனவே ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விண்வெளி திருமண சேவையை அடுத்த ஆண்டிலிருந்து தொடங்கி வைக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
– ராஜா சத்யநாராயணன், செய்தியாளர்.