சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஐ.சி.எஃப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் மற்றும் தெற்கு ரயில்வேயில் கடந்த 1998 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பல்வேறு பணிகளுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு, இதுவரை பணி வழங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் அப்ரண்டீஸ் பயிற்சி முடிப்பவர்களுக்கு பொது மேலாளரே நேரடி பணி நியமனம் செய்யலாம் என்ற உத்தரவு கடந்த 2016 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. பல்வேறு மாநிலங்களில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள், பொது மேலாளர் ஆணையுடன் பணியில் சேர்ந்துள்ளபோது, தெற்கு ரயில்வேயில் மட்டும் இதுபோன்ற பணி நியமனங்கள் செய்யப்படுவதில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணி வழங்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.