"அதிநவீன பீரங்கி கண்காட்சி"-பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெறும் அதிநவீன பீரங்கி கண்காட்சியில், கனரன வாகன தொழிற்சாலை மற்றும் படைத்துறை உடை தொழிற்சாலைகளின் தயாரிப்புகளை, பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அஜயா ஸ்டேடியத்தில், அதிநவீன முதன்மை பீரங்கி கண்காட்சி நேற்று தொடங்கியது.

கண்காட்சியில், படைத்துறை உடை தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் துப்பாக்கி குண்டுகளை தடுக்கும் தலைக்கவசம், குண்டு துளைக்காத ஆடைகள், மேம்படுத்தப்பட்ட போர் சீருடைகள், கூடாரங்கள், பாராசூட்டுகள், குளிர்கால ஆடைகள் போன்ற பல்வேறு தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கனரக வாகன தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் அஜய் டி-72, பீஷ்மா டி-90, அருண் எம்.கே.ஐ. மற்றும் பிரிட்ஜ் லேயர் டேங்க் டி-72 ஆகிய அதிநவீன பீரங்கிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

கியர் பாக்ஸ்,என்ஜின்கள் உள்ளிட்ட ஆயிரத்து 300 உதிரி பாகங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி வருகிற 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட இலவசமாக அனுமதிக்கபடுகின்றனர்.

Exit mobile version