வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி முதல் குந்தா பகுதி வரையில், 54 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள துரித நடவடிக்கையால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கனமழையால் அப்பர் பவானி, குந்தா, அவலாஞ்சி அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், 40 கிராமங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியை நெடுஞ்சாலை துறையினர் 6 ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு, போர்க்கால அடிப்படையில் சீர் செய்து வருவதால், போக்குவரத்து எந்தவித தடையும் இல்லாமல் இயங்கி வருகிறது.