தமிழக காவல்துறையில் சர்ச்சைகளில் சிக்கும் காவலர்கள், ஆயுதப்படைக்கு மாற்றப்படுவதாக அடிக்கடி செய்திகளை வருவதை பார்க்கிறோம். காவலர்களுக்கு தண்டனை அளிக்காமல் ஆயுதப்படைக்கு மாற்றக் காரணம் என்ன? அப்படியென்றால் அது தண்டனைக்குரிய பகுதியா? அப்படி என்ன இருக்கிறது ஆயுதப்படைப் பிரிவில்… வாருங்கள் பார்க்கலாம்…
ஜெமினி ஸ்டுடியோ பொம்மைகளை போல பீப்பீ ஊதிக் கொண்டிருக்கும் இவர்களும் நீளம் தாண்டி, உயரம் தாண்டி போலீஸ் வேலைக்கு வந்தவர்கள்தான். ஆனால் குற்றவாளிகளை சேஸிங் செய்ய வேண்டிய இவர்கள், ஏன் குயிலி குப்பம் கோபுரம் ஆன கதையை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்…? ஆம்… அதுதான் ஆயுதப்படை காவலர்களின் கெத்து.
பேண்ட் வாசிப்பது மட்டுமில்லை, ஜீப் ஓட்டுவது, குதிரையில் பவனி வருவது, கைதிகளை நீதிமன்றம் அழைத்துச் செல்வது, பின் சிறைச்சாலைக்கு கொண்டு செல்வது, போராட்டங்களில் கலவரங்கள் ஏற்படாமல் தடுப்பது, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற பல வேலைகளில் இறக்கி விடப்பட்டு இன்னலுக்கு ஆளாவது ஆயுதப் படை மைந்தர்கள் தான்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஆயுதப்படையில், ஆண் மற்றும் பெண் என மொத்தம் 8,855 பேர் உள்ளனர். கார்பன் துப்பாக்கி, ஏ கே -47, எஸ் எல் ஆர், 303 என 27 வகையான நவீன ஆயுதங்களை இந்த பிரிவில் உள்ளோர் பயன்படுத்துகின்றனர். காவல்துறைக்கு புதிதாக சேரும் இளைஞர்கள் தவிர இதிலுள்ள பெரும்பாலானோர் ஏதோ ஒரு வகையில் தண்டனை பெற்று இந்த பிரிவுக்கு மாற்றப்பட்டவர்கள் தான்.
காவல் நிலையங்களில் தனிக்காட்டு ராஜாவாக செயல்படும் இவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகு மேலதிகாரி களின் உதரவிற்கு பிறகே பணிக்கு செல்ல வேண்டும். இது ஒரு கௌரவக் குறைவாக காவலர் சமூகம் கருதுகிறது. மேலும் அதிக பணிச்சுமை ஆயுதப்படை காவலர்களுக்கே இருப்பதால் அவர்கள் மனதளவில் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
வெயில், புயல், மழை என எதுவாக இருந்தாலும் சாலையில் தவம் கிடக்க வேண்டும். ஆண்களை விட ஆயுதப்படையில் பணியாற்றும் பெண்களின் நிலை இன்னும் மோசம். காலையில் ஓர் இடத்தில் இறக்கி விடப்பட்டால் மீண்டும் எப்போது கூட்டி செல்வார்கள் என்பது கடவுளுக்குதான் தெரியும். அதுவரை எல்லா விதமான இயற்கை தேவைகளை அடக்கி கொண்டு அவர்கள் அந்த நாளை கடக்க வேண்டும்.
சிங்கம் படத்தை பார்த்து இரண்டு கைகளில் இரண்டு துப்பாக்கியை வைத்து சுடலாம் என்பது போல ஆயிரம் கனவுகளுடன் காவல்துறைக்கு வந்தவர்கள் இறுதியில் குயிலி குப்பம் வாசிக்க விடப்படுவதும் குதிரை மேய்க்க பணிக்கப்படுவதும் சொல்ல முடியாத துயரம்…மெல்ல முடியாத கவலை…அள்ள முடியாத அழுகை.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் யூசுப்புடன் செய்தியாளர் கோ. ஜெயக்குமார்
Discussion about this post