தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 70,59,982 மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ – அரசாணை

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சத்து 59 ஆயிரத்து 982 மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளார் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில், நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

அரசுத் துறையின் கீழ் உள்ள 37,358 தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 46,60,965 மாணவர்களுக்கும், அதே போன்று 8 ஆயிரத்து 386 அரசு உதவிபெறும், பகுதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 23,99,017 மாணவர்களுக்கும் என மொத்தம் 70,59,982 மாணவா்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தைச் செயல்படுத்திட ஒப்பந்தப் புள்ளிகள் அடிப்படையில் அட்டை தயாரித்திடும் பணியை முழுமையாக நடைமுறைப்படுத்திட 12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 ரூபாய் நிதி ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கார்டில் உள்ள ‘க்யூ ஆர் கோடு’ அல்லது பார் கோடு மூலம் மாணவர் சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல்களையும் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் பொதுத் தொகுப்பிலிருந்து இணையதளத்தின் மூலம் தகவல்களைப் பெற முடியும்.

மாணவர்கள் இடைநிற்றலை துல்லியமாகக் கண்டறிய இந்த ஸ்மார்ட் கார்டு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version