சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. முன்னாள் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சிவசங்கர் பாபாவிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் டேராடூன் சென்றனர். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவசங்கர் பாபாவிடம் டிஎஸ்பி குணவர்மன், ஆய்வாளர் ஜெய்சங்கர், உதவி ஆய்வாளர் ஸ்டீபன் ஆகியோர் விசாரணையை தொடங்கி உள்ளனர். சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் விதமாக, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தரைமார்க்கமாக நேபாளம் தப்பிச் செல்வதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிவசங்கர் பாபாவுக்கு உதவிய பள்ளி ஆசிரியர்கள் குறித்த பட்டியலை சேகரித்து, சி.பி.சி.ஐ.டி விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே சுஷில் ஹரி பள்ளி பெண் ஆசிரியைகள் இரண்டு பேர் மீது மாமல்லபுரம் மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.