வைரமுத்து தங்கி இருந்த அறைக்குள் என்னை போகச் சொன்னார்கள் – பாடகி சின்மயி அதிர்ச்சித் தகவல்!

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புதிய குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி பரபரப்பை கூட்டியுள்ளார். 

வீழ மாட்டோம் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் தொடர்பான ஆல்பம் ஒன்றின் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக தனது தாயாருடன் கனடா சென்று இருந்ததாக சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

இது நடந்தது 2005 அல்லது 2006 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்றும் தனக்கு நினைவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி முடிந்து அனைவரும் நாடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, தன்னை தொடர்பு கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர், தன்னை மட்டும் நாடு திரும்ப வேண்டாம் என கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வைரமுத்து தங்கிருந்த அறைக்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும், மறுத்தால் எதிர்காலத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என அச்சமூட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பாவது மண்ணாவது என கூறிக் கொண்டு, நாடு திரும்ப ஏற்பாடு செய்யுங்கள் என அவர்களிடம் கராராக கூறிவிட்டதாகவும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். #metoo என்ற ஹேஸ்டேக் மூலம் தனது கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் சின்மயி.

அவரது துணிச்சலை பலரும் பாராட்டுவதோடு, வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பலரும் சின்மயியிடம் தங்களது சோகக் கதைகளை சொல்லி வருகின்றனர். அவற்றையும் சின்மயி அம்பலப்படுத்தி வருகிறார்.

அதில் ஒரு பெண், கோடம்பாக்கத்தில் சுமார் 100 பேர் வரை தங்கும் மிகப்பெரிய பெண்கள் விடுதியை வைரமுத்து நடத்தி வருவதாகவும், அங்கு பல பெண்களின் அறைகளில் வைரமுத்து அனுமதி இன்றி நுழைவதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version