என் பேராசிரியர் எழுதுவதை நிறுத்திக்கொண்டார் – அறவாணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 77.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராக பணியாற்றிய அறவாணன் தமிழ் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றியவர். 1941ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த இவர், தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக் குழு உறுப்பினரான பணியாற்றி உள்ளார். சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசை 3 முறையும்,1986ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருதுகளை பெற்றுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அறவாணன், இன்று காலை காலமானார்.அவரது உடலுக்கு தமிழறிஞர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

தனது பேராசிரியர் எழுதுவதை நிறுத்திக்கொண்டதாக அறவாணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழே வாழ்வாகவும், வாழ்வே தமிழாகவும் வாழ்ந்தவர் பேராசிரியர் அறவாணன் என அவர் புகழாரம் சூட்டி உள்ளார். தமிழர்களின் அடையாள மீட்சிக்கு தனது ஆராய்ச்சியைப் பயன்படுத்தியவர் என்றும் அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் ஆராய்ச்சி உலகத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version