டெல்லிக்கு தப்பிச் சென்ற சிவசங்கர் பாபா கைது – சிபிசிஐடி காவல்துறை நடவடிக்கை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. முன்னாள் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சிவசங்கர் பாபாவிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் டேராடூன் செல்ல திட்டமிட்டனர். சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் விதமாக, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. தரைமார்க்கமாக நேபாளம் தப்பிச் செல்வதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இந்நிலையில்,  சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக டேராடூன் சென்றபோது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த  சிவசங்கர் பாபா தனியார் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது

இதையடுத்து தப்பியோடி தலைமறைவான சிவசங்கர் பாபாவை, உத்ரகாண்டில் உள்ள ஆசிரமங்களில் ஏதும் பதுங்கி உள்ளரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தேடி வந்தனர். உத்தரகாண்ட் மற்றும் டெல்லியில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டு வந்த நிலையில் தெற்கு டெல்லியின் காசியாபாத்தில் சிவசங்கர் பாபா பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .பின்னர் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் உத்தரகாண்ட்டிலிருந்து டெல்லிக்கு தப்பியோடி, காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த இரண்டு கணினிகள் மற்றும் 4 மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர். தன்னை கண்டுபிடித்துவிடாமல் இருக்க மொட்டையடித்து , மாறுவேட முயற்ச்சியில் ஈடுபட்டதும் தெரிவவந்துள்ளது.

டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ,விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை இன்று அல்லது நாளை சென்னைக்கு கொண்டு வர சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version