பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்குக் கருணை காட்ட முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிய கண்ணன் என்பவர், தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக உடன் பணிபுரிந்த பெண் ஒருவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆலை நிர்வாகம், கண்ணனைப் பணி நீக்கம் செய்தது. இந்த உத்தரவை எதிர்த்துக் கண்ணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண், புகாரைத் திரும்பப் பெற்றுவிட்டதாகக் கூறிக் கண்ணனை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம்,
குடும்ப நிர்ப்பந்தங்கள் காரணமாகப் பெண் புகாரைத் திரும்பப் பெற்றுள்ளார் என்பதற்காக இந்த வழக்கில் இருந்து கண்ணனை விடுவித்தால் அது சமுதாயத்திற்குத் தவறான செய்தியைக் கொண்டு சேர்க்கும் எனக் கூறி, தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரும் வரை, சமத்துவம் மற்றும் வளர்ச்சி அடைந்து விட்டதாக உரிமை கோர முடியாது என நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நிறுவனங்களின் கடமை என அறிவுறுத்திய நீதிபதி, பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்குக் கருணை காட்ட முடியாது எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post