பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கடைசி போட்டியை தோல்வியுடன் நிறைவு செய்து, விளையாட்டுத் துறையில் இருந்து விடைபெற்றிருப்பது அவரது ரசிகர்களை சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லாவை எதிர்த்து விளையாடினார்.
விறுவிறுப்பான ஆட்டத்தில் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை அஜ்லா தோற்கடித்தார். இதனால் அமெரிக்க ஓபனிலிருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார்.
டென்னிஸ் வாழ்க்கையில் 27 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க ஓபனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், தொடரிலிருந்து தோல்வியுடன் அவர் வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.