புத்தனுக்கு போதி மரம் ஞானத்தை வழங்கியதைப் போல, ஆசிரியர்கள் மாணவர்களுக்கான போதி மரமாக ஞானத்தை வழங்கி வருகின்றனர். அப்படிப்பட்ட ஆசிரியர்களை போற்றும் விதமாக ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதுகுறித்து காண்போம்…
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்ற வரிகளைப்போல ஆசிரியர் வளர்ப்பிலும் அடங்கியிருக்கிறது ஒரு குழந்தையின் எதிர்காலம் என்றால் அது மிகையல்ல.
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதிக் காலம் வரை வாழ்ந்துக் காட்டய, சுதந்திர இந்தியாவின் முதல் துணைக்குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒரு மனிதன் சமூகத்தில் நற்பண்புகளை வளர்த்துக்கொண்டு, நல்லது கேட்டது அறிந்து, வாழ்க்கையில் முன்னேறிய பல வெற்றியாளர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்களே முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ளனர். மேய்ப்பர்கள் கையில் இருக்கும் குச்சி அடிக்க மட்டுமல்ல வழிகாட்டவும் தான் என்பதற்கேற்ப, தன் மாணவன் எந்த சூழ்நிலையில் தவறு செய்தாலும் அவர்களை திருத்துவதற்கு பிரம்பை எடுப்பதுன்னு ஆசிரியர்கள்.
ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் ” என் புள்ள தப்பு செஞ்சா, 2 கண்ணையும் விட்டுட்டு தோல உரிச்சிபுடுங்க” என்று ஆசிரியர்களிடத்தில் பல பெற்றோர்கள் தங்களது சுமைகளை இறக்குவதுண்டு. ஆசிரியர்களும் பொறுப்புணர்வோடு ஒவ்வொரு மாணவனின் ஒழுக்கத்துக்கும், நற்பண்புகளை கற்றுக்கொடுப்பதற்கும் அரும்பாடு படுவர்.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித இடைவெளி இருப்பதை ஓப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். அதற்கு பெற்றோர்களும் ஒரு காரணி என்பதை மறுப்பதற்கில்லை.
எல்லாவற்றையும் ஆசிரியர்களை விட சமூக வலைத்தளங்கள் அதிகமாக கற்றுக்கொடுக்கும் என்று மாணவர்களின் மனநிலை மாறியிருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள் என்னவோ தங்களது மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையில் பல மாறுபாடுகளை மேற்கொண்டு, தங்களை நாளுக்கு நாள் அப்டேட் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
ஒரு ஈரமான களிமண் போன்றதுதான் மாணவப் பருவம். அந்த ஈரம் காய்வதற்கு முன்னரே ஆசிரியர்களால் எப்படி உருவாக்கப்படுகிறார்களோ அதுதான் அந்த மாணவர்கள்.
அறிவும், சிந்தனையும், ஒழுக்கமும், பண்பும் நிறைந்த ஒரு சிறந்த மனிதனாக உருவாக்கப்பட்டால் அவர்களே நாட்டின் சிறந்தவர்கள். ஈரமான களிமண் காய்ந்துவிட்டால் அதனை செதுக்கமுடியாது. மாணவப் பருவத்தே தேவையானவை அத்தனையும் அவர்களுக்குள் உள்ளேற்றம் செய்யப்பட வேண்டும். அதை செவ்வனே செய்வது ஆசிரியர்கள்.
அதேபோல தன்னிடம் படித்த மாணவன் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் பொறாமை கொள்ளாத ஒரே ஜீவன் ஆசிரியர் மட்டுமே. மேலும் மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞனாக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.