கைவிட்டுப்போகிறதா டாஸ்மாக் துறை ? கலக்கத்தில் செந்தில் பாலாஜி!

திமுக தலைவர் ஸ்டாலினா? செந்தில்பாலாஜியா? என்று உடன்பிறப்புகளிடம் கருத்துக்கணிப்பு நடத்தினால், ஒரு வேளை செந்தில்பாலாஜிதானோ என்று பல ஊபிக்களும் சொல்லக் கூடும்… அந்த அளவுக்கு மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி வட்டச் செயலாளர்கள், அடிமட்ட நிர்வாகிகள் வரை வைட்டமின் ‘ப’ வால் வளைத்துப் போட்டு வைத்திருக்கிறார் செந்தில்பாலாஜி என்று திமுகவினரே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றனர்..

இப்படி திமுகவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரை முதற்கட்டமாக அமைச்சரவையில் இருந்து கட்டம் கட்ட திமுக தலைமையை யோசிக்க வைத்துள்ளது செந்தில்பாலாஜி தொடர்புடையவர்களிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகள்.

செந்தில்பாலாஜியின் சகோதரர், உறவினர்கள், தொழில்முறை நண்பர்கள், டாஸ்மாக் மற்றும் மின்வாரியம் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் என சென்னை, கோவை, கரூர் உள்பட 200 இடங்களில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனைகள், ஜப்பானிலும் ஸ்டாலினை இருப்புக் கொள்ளச் செய்யவில்லை என்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திமுகவின் சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, தங்களது மாவட்டங்களில் மட்டுமாவது தாங்கள் குறிப்பிடும் நபர்களை டாஸ்மாக் பார்களை நடத்த அனுமதிக்கும்படி கேட்டிருக்கிறார்கள். திமுகவின் ஃபண்டிங் பார்ட்டியே செந்தில்பாலாஜிதான்… முதலமைச்சராக நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் சேர்ப்பது தொடங்கி, தேர்தலுக்கு அள்ளிக் கொடுப்பது, கட்சி நிர்வாகிகளுக்கு பணம் கொடுப்பது… இவ்வளவு ஏன்? ஜி ஸ்கொயருக்கும் ரெட் ஜெயண்டுக்குமே அவர்தான் ஃபண்ட் கொடுக்கிறார்… உங்களால் செய்ய முடியுமா? என்று ஸ்டாலின் திருப்பிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படியெல்லாம் உச்சந்தலையில் தாங்கிய ஸ்டாலினுக்கே செந்தில்பாலாஜி தொடர்பாக நடைபெற்ற வருமான வரி ரெய்டு உதறலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்கள் உள்கட்சி விவகாரம் அறிந்தவர்கள்.

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்பதும், கரூர் கம்பெனியின் அடாவடி கலெக்ஷனும்தான், திமுகவின் அதிகார மையங்களுக்கு வைட்டமின் ப வை வாரி வழங்க அமுதசுரபியாய் இருந்தது செந்தில்பாலாஜிக்கு. ஆனால் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்த விவகாரம், சமூக வலைதளங்களில் வீடியோவுடன் வெளியானதன் தொடர்ச்சியாக, இந்த வருமானங்கள் யாருக்கு, எங்கே, எப்படி செல்கிறது என்னும் கேள்விகள் எழ, அதற்கு விடைதேடியிருக்கிறது வருமான வரித்துறை.

இந்த ரெய்டுகளால் திமுக தலைமை அரண்டு கிடக்க, சீனியர் அமைச்சர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். கட்சிக்குள் வந்து சில ஆண்டுகளிலேயே திமுகவின் கிச்சன் கேபினட் உள்பட அதிகார மையங்களுக்கு நெருக்கமான செந்தில்பாலாஜியால், சீனியர்களான தங்களை ஸ்டாலின் புறக்கணிப்பது வருத்தத்தை தந்த நிலையில், தற்போதைய சூழலை சாதகமாக்கி, செந்தில்பாலாஜியை கட்டம் கட்ட அவர்கள் ஒன்று சேர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள்.

டாஸ்மாக் துறையை தந்தால் நாங்கள் பார்க்கமாட்டோமா? என்று அமைச்சர் துரைமுருகன் முன்னமே ஒரு நிகழ்வில் பேசியிருந்தார்… தற்போது ஐ.பெரியசாமி தனக்கு டாஸ்மாக்கைத் தரச்சொல்லி ஸ்டாலினை நச்சிக்கொண்டிருக்கிறார்… இப்படி சீனியர்கள் எல்லாம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையைக் கைப்பற்ற காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக தலைமையும் தற்போதைய இக்கட்டான சூழலை சமாளிக்க அமைச்சரவை மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. அதுவும் செந்தில்பாலாஜியை கட்டம் கட்டத் தயாராகி விட்டதாம். ஆவடி நாசரை நீக்கியது போல் ஒரேயடியாக அமைச்சரவையை விட்டு தூக்காமல், பி.டி.ஆரை மாற்றி அடித்தது போல, மதுவிலக்கில் இருந்து மாற்றி செந்தில் பாலாஜிக்கு கதர்வாரியத்தை கொடுக்கும் முடிவில் தலைமை இருக்கிறதாம். இந்த தகவல் செந்தில் பாலாஜிக்கும் தெரியவர, பசையுள்ள துறை கையைவிட்டுப் போவதால் கலக்கத்தில் இருக்கிறாராம்.

 

 

Exit mobile version