செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகக் கூட இருக்கக் கூடாது – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

செந்தில்பாலாஜி தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் நீதிமன்றக் காவலில் உள்ளார். கைதினைத் தொடர்ந்து அவரது இலாகாக்கள் மாற்றப்பட்டது. தங்கம் தென்னரசு மின்சாரத்துறையையும், முத்துச்சாமி மதுவிலக்குத் துறையையும் பெற்றுக்கொண்டு, செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்ற அரசாணையை திமுக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்துள்ளார்.

அம்மனுவில் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியால் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாது. அமைச்சர்கள் நியமிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. மேலும் செந்தில் பாலாஜியை இலாகா இல்லா அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு விரோதமானது என்று கூறப்பட்டிருந்தது.  இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Exit mobile version