திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் குடும்ப விருந்து நிகழ்ச்சிகளில் கூட மதுபானம் பரிமாறலாம் என்று அரசாணையில் அறிவித்து விட்டு, எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அது வெறும் சர்வதேச நிகழ்ச்சிகளுக்குத்தான் என்று காதில் பூசுற்றிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கருணாநிதி தொடங்கி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி என்று மூன்று தலைமுறைகளாக மக்களிடம் முன் வைக்கும் முதல் தேர்தல் வாக்குறுதி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதுதான்… அதிலும் கனிமொழி ஒருபடி மேலே போய் திமுகவினர் நடத்தும் மதுபான ஆலைகளை எல்லாம் மூடுவோம் என்றார். இதையெல்லாம் நம்பி வாக்களித்த மக்களின் முகத்தில் நம்பிக்கை துரோகம் என்னும் மோசடி கரிபூசி இன்றும் டாஸ்மாக்கை நடத்தி வருகிறது விடியா திமுக அரசு… அரசின் வருமானத்துக்கான அட்சய பாத்திரமாக விளங்கும் டாஸ்மாக் இன்று திமுகவின் அதிகார மையங்களின் வருமானத்துக்கான அட்சய பாத்திரமாகி உள்ளது. கரூர் கம்பெனி என்னும் பெயரில் டாஸ்மாக்குகளிலும், பார்களிலும் வசூலித்து கொட்டப்படும் கோடிகள் கணக்கற்றவை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இந்த வருமானத்தை இன்னும் பெருக்குவதற்காக தமிழகம் முழுவதும் மனமகிழ் மன்றங்களில், பார்களை தொடங்க அனுமதி அளித்தது ஒருபுறம் என்றால் இன்றோ தமிழ்நாடு மதுபான விதிகளில் திருத்தம் செய்துள்ளது விடியா திமுக அரசு. குடும்ப விழாக்கள் நடக்கும் திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள், வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறுவதற்கு சிறப்பு உரிமம் வழங்க வசதியாக அந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடக்கும் இடங்களைப் பொறுத்து, அதற்கான உரிமக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது பொதுமக்களிடையேயும், அரசியல் கட்சியினரிடையேயும், திமுக கூட்டணியினரிடையேயும் கூட அதிருப்தியை ஏற்படுத்தி, திமுக அரசுக்கு எதிராக ஆவேச அலை எழுந்துள்ளது. ஆனால் திருமண மண்டபங்களில் மதுபானத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று மக்களின் கோபத்தை மடைமாற்ற முயற்சி செய்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த நிகழ்ச்சியிலும் மதுபானங்கள் பயன்படுத்த அரசு அனுமதிக்காது என்றும், சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி இன்னும் ஏன் மக்களின் காதுகளில் பூசுற்றிக் கொண்டிருக்கிறார்? இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்னும் ரீதியில் எங்கெங்கு காணினும் டாஸ்மாக் என்னும் நிலையை இந்த விடியா அரசு ஏற்படுத்தி வருவது கண்கூடு… தமிழகத்தை போதையில் தள்ளாடச் செய்யும் இந்த ஆட்சிக்கு மக்களே முடிவு கட்டுவார்கள் விரைவில்…