விடியா திமுக அரசின் ஊழல்கள் குறித்து ஆளுநரை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மனு அளித்திருந்த நிலையில், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் விவகாரம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களிடம் கரூர் கம்பெனி என்ற பெயரில் கமிஷன் கேட்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில்தான், வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கோவை, கரூர் உள்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கரூரில் 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட வீடு ஒன்றை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.