ஆயிரம் கட்சி கண்ட அபூர்வ செந்தில் பாலாஜி! ஈராண்டு ஆட்சி ED ரெய்டே சாட்சி!

கொள்ளை அடிப்பதையே கொள்கையா வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கொள்ளையடிக்க காலம் பார்த்துக் கொண்டிருக்கும் செந்தில் பாலாஜி யார்? எப்படிப்பட்டவர்? அவர் பின்னணி என்ன? இதோ பார்க்கலாம்…

கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்த வி.செந்தில்குமார் என்பவர் பின்னாளில் ஜோசியர்களின் யோசனையால், தன் பெயரை செந்தில்பாலாஜி என மாற்றிக்கொண்டார். அன்று பெயர் மாற்றத்தில் தொடங்கியது இன்று கட்சி மாற்றம் வரை தொடர்கிறது…

கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய செந்தில்பாலாஜி 1995ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். ஆனால், அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததையடுத்து 2000ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த செந்தில் பாலாஜி 2011ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. இதையடுத்து அத்துறையில் எழுந்த பல்வேறு புகார்களால் 2015ஆம் ஆண்டில் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டன.

புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டிடிவி அணியில் இணைந்தார். இதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செந்தில்பாலாஜி, தனது கரூர் கம்பெனி ஆதரவாளர்களுடன் 2018ஆம் ஆண்டு மீண்டும் திமுகவிற்கே காவடி தூக்கத் துணிந்து அங்க இணைந்தார். கட்சிக்கு கட்சித் தாவிப் பழகிய செந்தில்பாலாஜி தற்போது தஞ்சமடைந்துள்ள இடம் திமுக. எந்தக் கட்சியில் இருந்தாலும் அதன் அதிகார மையத்துக்கு விரைவில் மிக நெருக்கமாகிவிடுபவர் செந்தில்பாலாஜி. அந்த தந்திர வேலை என்னவென்பது யாருக்கும் தெரியாது … அது ஓர் பெரும் புதிர்..

திமுகவில் மூத்த அமைச்சர்கள் பலர் இருந்த நிலையில், செல்வம் கொழிக்கும் மின்வாரியத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின். இது திமுகவினரிடையே அதிருப்திகளை கிளப்பியது. இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்த அசைமெண்டுகள் வழங்கப்பட்டன.

2021ம் ஆண்டு உள்ளாட்சித்தேர்தலில் கோவையின் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி… அங்கு அவர் கையில் எடுத்தது கொலுசு ஃபார்மூலா… 100 வார்டுகள் உள்ள கோவையில் வார்டு ஒன்றுக்கு ஒன்றரைக் கோடி வரை செலவழித்தது திமுக. இதில் பெண் வாக்காளர்களைக் கவர வெள்ளிக் கொலுசு, பட்டுப்புடவை, குத்துவிளக்கு, வெள்ளிக் குடம் என களம் கண்டார். 300 கிலோ வெள்ளிக் கொலுசு வரை வாரி வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், வழங்கப்பட்ட வெள்ளிக் கொலுசுகள் தரமில்லாமல் இருந்ததாக புகார் எழுந்தது தனிக் காமெடி.

அதே நேரத்தில் ஆண் வாக்காளர்களுக்கு அன்லிமிடெட் சரக்கு வழங்கி தான் வகிக்கும் துறைக்கு பெருமை சேர்த்தவர். நேரடியாக பணம் கொடுத்தால் மாட்டிக்கொள்வோம் என அஞ்சி வாக்காளர்களுக்கு OR கோட் அடங்கிய சீட்டுகள் வழங்கப்பட்டு ஜிபே, பேடிஎம் மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக வடவள்ளியில் அதிக வாக்குகளைக் கொண்ட ஒரு குடும்பத்துக்கு பேரம் படியாமல் வீட்டில் ஒரு வாக்குக்கு ரூ.35 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. இந்த ஜனநாயக படுகொலையைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. மாபெரும் வெற்றி என திமுக மார்தட்டிக்கொண்டதன் பின்னணியில் இத்தனை கீழ்த்தரமான வேலைகளை இருந்ததை என்னவென நொந்துகொள்ள.

இப்படி தில்லுமுல்லு வேலை செய்து கோவையில் வெற்றியடைந்து ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்றதால் ஈரோடு இடைத் தேர்தலில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் செந்தில்பாலாஜி. தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் வழங்கும் ஃபார்மூலாக்களுக்கு வித்திட்டது திருமங்கலம் ஃபார்மூலா. ஜனநாயக படுகொலையாக கருத்தப்படும் ஓட்டுக்கு பணம் எனும் திமுகவின் ஃபார்முலாக்களை தூக்கி சாப்பிடும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது “பட்டி ஃபார்மூலாவை” கையாண்டார் செந்தில் பாலாஜி. கரூர் கம்பெனி கும்பலைக் களம் இறக்கி வீடுகளில் எத்தனை ஓட்டுகள் தேறும் என்பதை வீட்டு வாசலில் எழுதி வைத்து மின்வாரியத் துறை அமைச்சர் என்பதை நிரூபிக்கும் வகையில் நைட்டோடு நைட்டாக வீடுகளுக்கு கரண்ட் கட் செய்து மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கினார். வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம் வாக்காளர்களை மண்டபங்கள், வீடுகளில் அடைத்து வைத்து பணம் கொடுத்து வாக்களிக்க அழைத்துச் சென்ற பட்டி ஃபார்மூலா கூத்தும் அரங்கேறியது.

கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பது, டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வாங்குவது என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிய செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை களைகட்டுகிறது… ஆம், ஊழல், ஊழல்,ஊழல்… ஊழலைத் தவிர வேறு எதுவும் அறியாத சரக்கு அமைச்சருக்கு வேறென்ன கதி?

– சித்தார்த்

Exit mobile version