செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றியும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்கலாம் என்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமாக அறிவித்த அரசாணை மத்திய அரசு சட்டத்துக்கு மேலானது அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளனர்.