அமலாக்கத்துறையால் நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்டும் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்த செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், இதயம் சார்ந்த நோய் காரணமாக மேலும் 4 வாரம் கால அவகாசம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜியின் தம்பியான அசோக்குமாரிடம் விசாரணை நடத்த இதுவரை மூன்று முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதே போல வருமான வரித்துறையும் சம்மன் அனுப்பியும் அசோக்குமார் இதுவரை ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வருகிறார். அமலாக்கத்துறை கடந்த வாரம் நான்காவது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில், இதயம் சார்ந்த பிரச்சனைகளில் அசோக்குமார் பாதிக்கப்பட்டதால் நேரில் ஆஜராவதற்கு மேலும் 4 வாரம் அவகாசம் கேட்டுள்ளதாக அசோக் குமாரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இந்த முறை ஆஜராகி விளக்கம் அளிக்காத பட்சத்தில், விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமலாக்கத்துறை தீவிரம்காட்டி வருகிறது.