மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் நானூறு புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
இந்தியப் பங்குச்சந்தைகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டது. இந்நிலையில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காட்டுக்கும் கீழ் குறைந்துள்ளதாகத் தேசியப் புள்ளியியல் அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியானது. இதை அடுத்துப் பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. இன்று நண்பகல் 12 மணிக்கு மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு 417 புள்ளிகள் சரிந்து 40 ஆயிரத்து 713 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 50 புள்ளிகள் சரிந்து 12 ஆயிரத்து 30 ஆக இருந்தது. உலோக நிறுவனங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இந்துஸ்தான் அலுமினியம் கம்பெனி பங்குகள் 3 விழுக்காடும், வேதாந்தா பங்குகள் 2 விழுக்காடும், மாருதி சுசுகி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்குகள் ஒன்றரை விழுக்காடும் வீழ்ச்சியடைந்தன. இந்துஸ்தான் லீவர், பிரிட்டானியா, ஆசியன் பெயின்ட்ஸ், பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றின் பங்கு விலைகளும் வீழ்ச்சியடைந்தன.
Discussion about this post