ஒகேனக்கலில் பொதுமக்களுக்கு விற்பதற்கு என வைக்கப்பட்டிருந்த 195 கிலோ கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பணத்திற்கு ஆசைப்பட்டு உயிருடன் விளையாடும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு விற்பதற்கு என வைக்கப்பட்டிருந்த அழுகிய மீன்களைத் தான் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுதளங்களில் ஒன்றாக ஒகேனக்கல் உள்ளது. கர்நாடகத்தில் உருவாகும் காவேரி தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நதியாக நுழைகிறது. தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும், விடுமுறை நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து அருவிகளை பார்த்து மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்தும் பின்பு அம்மியில் அரைத்து சமைக்கப்படும் சுவையான மீன் குழம்பை ருசித்து சாப்பிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில், ஒகேனக்கல் சுற்றுலா தளத்திலுள்ள மீன் கூடங்களில் அழுகிய நிலையில் உள்ள பழைய மீன்களை விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. அதனை உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் உள்ள சுமார் 30 கடைகளில் ஆய்வு செய்து அங்கு அழுகிய மீன்கள் விற்கப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து மீன்கள் மீது பார்மிலின் கெமிக்கல் பூசப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தனர். அதில் பார்மிலின் கலக்கவில்லை என்பது உறுதியானது.
இதையடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 195 கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குழி தோண்டி புதைத்தனர். மேலும், அழுகிய மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்து நோட்டீஸ் வழங்கிச் சென்றனர்.
ஒகேனக்கல் வரும் பொதுமக்கள் ரசித்து உண்ணும் மீன் உணவில், இது போன்ற சில கடை உரிமையாளர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அழுகிய மீன் விற்பனை செய்யும் சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை அளித்தது மட்டுமல்லாமல் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.