அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும்: மத்திய அரசு

அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சிறுமிகள், பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சிக்காக பள்ளி ஒன்றுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சிக்கான நிதியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ‘நிர்பயா’ நிதி அல்லது மாநில அரசின் வேறு ஏதாவது திட்டத்தின் கீழ் வழங்குமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் ரமேஷ் பொக்ரியால் கூறினார்.

Exit mobile version