அதிமுக ஆட்சியைப் போல, தற்போதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென, சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொரோனா இரண்டாம் அலையில் மாற்றுத்திறனாளிகள் கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக மாற்றுத்திறனாளிகள் விடுதலை முன்னணி சார்பில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது, அதிமுக அரசு மாற்றுத்திறனாளிகள் மீது சிறப்புக் கவனம் எடுத்து, நிவாரண உதவி வழங்கியதுபோல, தற்போதைய திமுக அரசும் நான்காயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அரசுத் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டுமென்றும் கோஷங்கள் எழுப்பினர்.
மாற்றுத்திறனாளிகள் விடுதலை முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.