விடியா ஆட்சியில் சிறைக்குள் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவர் சிறைக்குள் இருந்தே வாட்ச் அப் காலில் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறைச்சாலைகளில் கண்காணிப்பின் அலட்சியதை அம்பலப்படுத்தியுள்ள சம்பவம் குறித்து பார்ப்போம்.
சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான சரவணன் தான் தன்னை சீசிங் ராஜா வாட்ஸ் அப் காலில் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக புகார் அளித்திருக்கிறார். கடந்த 2020 ஆண்டு தொழிலதிபர் சரவணனை வீடு புகுந்து கடத்திச் சென்று பணம் பறித்துள்ளார் ரவுடி சீசிங் ராஜா. அப்போது, அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து வேளச்சேரியில் ஒருவரை மிரட்டிய வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா தற்போதுவரை பூந்தமல்லி கிளைச்சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான் கிளைச்சிறையில் இருந்து கொண்டே, கடந்த 2020ல் தன் மீது போட்ட கடத்தல் புகாரை வாபஸ் பெறச் சொல்லி செல்போனில் வாட்ஸ் அப் காலில், சரவணனை மிரட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஏப்ரல் 12ஆம் தேதி சரவணன் பள்ளிக்கரணை காவல் துணை ஆய்வாளருக்கு அளிக்கப்பட்ட புகாரை அவர் சிட்லப்பாக்கம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்த நிலையில், தாம்பரம் காவல் ஆணையரகத்தை தொடர்பு கொண்ட பின்னர்தான் தற்போது புகார் தொடர்பாக, சிட்லப்பாக்கம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விடியா திமுக ஆட்சியில் காவல்துறையின் அலட்சியம் நாள்தோறும் சந்தி சிரிக்கும் நிலையில், தற்போது சிறைச்சாலைக்கு உள்ளே இருந்து கைதி ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்திருப்பது சிறைத்துறையின் செயல்பாட்டையும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.
– ஈசிஆர் செய்தியாளர் சதீஷ் மற்றும் ஆசாத்.