கருத்துகேட்பு கூட்டத்தில் சீமானிடம் கூச்சலிட்ட திமுகவினர் !

மெரினாவில் பேனா சிலை அமைப்பதற்கான கருத்துகேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிலை அமைப்பதற்கு எதிராக கருத்துச் சொல்பவர்கள் மீது திமுகவினர் கூச்சல் எழுப்பி அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிற்கு எதிராகவும் திமுகவினர் கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து கருத்துக்கேட்புக் கூட்டத்திலிருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இறந்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள், கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் அறுத்துப்பார்த்தால் பிளாஸ்டிக் கழிவுகள்தான் உள்ளது. இந்தச் சூழலில் பேனா சிலை அமைப்பது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். சிலை வைப்பதற்கு பல இடங்கள் உண்டு. அண்ணா அறிவாலயத்தில் வைக்கலாம், நினைவு மண்டபம் கட்டி அதன் அருகில் வைக்கலாம். யாரும் தடுக்கப்போவது இல்லை. எழுதாத பேனாவிற்கு செலவு செய்து சிலை வைத்து கும்பிட்டால் பகுத்தறிவு, எழுதும் பேனாவினை ஆயுதபூஜை அன்று கும்பிட்டால் அது மூடநம்பிக்கையா? திமுகவுடையது எப்படிப்பட்ட சிந்தாந்தம், கோட்பாடு என்று நீங்களே பாருங்கள் என சீமான் தன் கருத்தினைத் தெரிவித்தார்.

பள்ளிக்கூடத்தை சீரமைக்க, புனரமைக்க காசு இல்லை நிதி தாருங்கள் என்று சொல்லும் திமுகவிற்கு இந்த பேனா சிலை அமைக்க 86 கோடி ரூபாய் எப்படி வருகிறது என்று கேள்வி எழுப்பினார் சீமான். முதியவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பதற்கு காசு இல்லை, ஓய்வூதியம் கொடுப்பதற்கு காசு இல்லை எனச் சொல்லி நிதி இல்லை நிதி இல்லை என்று சொல்லும் திமுகவிற்கு சிலை அமைக்க மட்டும் எங்கிருந்து காசு வருகிறது என்று குறிப்பிட்ட சீமான், கடலுக்குள்தான் சிலை வைப்பேன் என்று பிடிவாதம் கொள்வதற்கு காரணம் என்ன என்ற கேள்வியினையும் முன்வைத்தார். திருவள்ளுவருக்கு கடலில் சிலை அமைத்திருப்பது என்பது அதை அமைப்பதற்கான பாறை இருந்தது அதனால் எளிதாக அமைக்க முடிந்தது. ஆனால் இது அப்படியல்ல கடலில் கல்லைக் கொண்டுபோய் நிரப்ப வேண்டும். இது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து. எந்த சூழ்நிலையில் வல்லுநரிடம் கேட்டாலும் அமைக்கக் கூடாதுதான் சொல்வார்கள் என்று சீமான் பேசினார்.

Exit mobile version