திராவிடக் கட்சிகளின் முதல் முதல்வராக 1967ல் அறிஞர் அண்ணா அவர்கள் பதவி ஏற்றார். 1969ஆம் ஆண்டில் அவர் முதல்வராகவே மறைந்தார். தனது 2 ஆண்டுகால ஆட்சியில் அறிஞர் அண்ணா அவர்கள் செய்த சாதனைகள்தான் அவர் மறைந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றும் நாம் அவரை நினைவுகூரக் காரணமாக உள்ளன. அறிஞர் அண்ணாவின் மிக முக்கிய சாதனைகள் சிலவற்றைக் காண்போம்.
தந்தை பெரியாரின் மிக முக்கியமான சமூகச் சீர்திருத்தங்களில் ஒன்றான ‘சுயமரியாதைத் திருமண’த்திற்கு அறிஞர் அண்ணா சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார். இதனால் அதற்கு முன்புவரை, ‘திருமணத்தில் ஒரு புரோகிதர் இருந்தால்தான் அது செல்லும், தாலி கட்டினால்தான் செல்லும்’ – என்று இருந்த நிலையை அறிஞர் அண்ணா மாற்றினார்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு சிலப்பதிகாரம் எழுதப்பட்ட போதே ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதில் காணப்பட்டது. அன்றைய தமிழகம் வடக்கே திருப்பதியையும், தெற்கே கன்னியாகுமரியையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. பின்னர் காலத்தால் அந்தப் பெயரைத் தொலைத்த தமிழகம் ‘சென்னை மாகாணம்’ – என்றுதான் சுதந்திரத்தின் போது அழைக்கப்பட்டது.
இன்றைக்கு மீண்டும் நாம் நமது மாநிலத்தைத் ‘தமிழ்நாடு’ என்று பெருமையோடு அழைக்கக் காரணம், 1967 ஏப்ரல் 16ல் அறிஞர் அண்ணா கொண்டுவந்த பெயர் மாற்றத் தீர்மானமே ஆகும். இதன் மூலம் சென்னை மாகாணம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் பெற்றது.
மேலும், முந்தைய அரசு பின்பற்றிய மும்மொழித் திட்டத்தைக் கைவிட்ட அறிஞர் அண்ணா இருமொழித் திட்டத்தை உருவாக்கினார். இதனால் தமிழ், ஆங்கிலம், இந்தி – ஆகிய 3 மொழிகளை மாணவர்கள் கட்டாயம் படித்தே ஆக வேண்டும் என்ற நிலை மாறி, தமிழும் ஆங்கிலமும் படித்தால் போதும் என்ற நிலை உருவானது. பிற தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா – ஆகியவை இந்தியை எதிர்க்கத் தயங்கிய நிலையில் அண்ணா அதனைத் துணிந்து செய்தார்.
அதுவரை மத்திய அரசால் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழிக்காக இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை 1968 ஆம் அண்டு ஜனவரி 3 ஆம் தேதி அண்ணா அவர்களின் அரசு நடத்தியது. அந்த மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்கள் பங்குபெற்று தமிழின் பெருமைகளைப் போற்றியபோது தமிழகம் பெருமிதம் கொண்டது.
இத்தனைக்கும் மேலாக, ‘திராவிட அரசியல்’ என்ற மாபெரும் மாற்று சிந்தனையை அறிஞர் அண்ணா மக்களிடம் வெற்றிகரமாக விதைத்துச் சென்றார். 1967ல் அண்ணா பதவியேற்ற நாள் முதல், இன்றுவரை தமிழகத்தில் திராவிட சித்தாந்தத்தை ஏற்கும் கட்சிகளால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நிலையே உள்ளது. அதன் காரணம் அறிஞர் அண்ணாவின் தொலைநோக்கும், கொள்கைப் பிடிப்புமே ஆகும்.
அறிஞர் அண்ணா அவர்கள் 1969ல் மறைந்த போது, ‘நடக்கக் கூடாதது நடந்துவிட்டது, தமிழர்கள் இழக்கக் கூடாத தலைவரை இழந்துவிட்டார்கள்’ – என்றார் பெரியார். அண்ணாவின் இறுதி ஊர்வலத்தின் போது சென்னையே மக்கள் வெள்ளத்தில் நீந்தியது. அன்று கூடிய கூட்டம் கின்னஸ் உலக சாதனையாகவும் அங்கீகரிக்கப்பட்டது. அண்ணாவின் பெருமையை இந்திய மக்கள் அனைவரும் நினைவு கூரும் வகையில் அண்ணா அவர்களுக்கு ‘’பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
Discussion about this post