பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது.
243 தொகுதிகள் கொண்ட பீகாரில் வரும் 28ஆம் தேதி முதல் நவம்பர் 7–ந் தேதி வரை மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வேட்பாளர் தேர்வு, கூட்டணி உடன்படிக்கை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றை அரசியல் கட்சிகள் இறுதி செய்து வருகின்றன. இந்நிலையில், 243 தொகுதிகளை சமமாக பிரித்துக் கொள்வதாக பாரதிய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் முடிவு செய்து அறிவித்துள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமை வகிப்பார் என்று பா.ஜ.க. தலைமை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 122 தொகுதிகளிலும், பாஜக 121 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் மாஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவா மோர்ச்சா கட்சிக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி, தனது பங்கில் இருந்து 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் விகாஷீல் இன்சான் கட்சிக்கு இடங்களுக்கு ஒதுக்குவது குறித்து பா.ஜ.க. ஆலோசித்து வருவதாகவும் நிதிஷ் குமார் கூறினார்.