பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாமல் மாணவர்களுக்கு எப்படி போதுமான கல்விபயிற்சியை அளிக்க முடியும் என்று கல்வியாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
2023 – 24 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள இந்த சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சுமார் 13 ஆயிரம் தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாகவும், உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் 7ஆயிரத்துக்கும் அதிகமான காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
கல்லூரிகளை பொறுத்தவரை இன்றைய நிலவரப்படி காலியாக இருக்கும் 7 ஆயிரம் பணியிடங்களை கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டு ஈடுகட்டி வருகிறது. அதே நேரத்தில், இந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயித்துள்ள ஊதியத்தை தமிழக உயர்கல்வி துறை வழங்கவில்லை என்பதும் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் குற்றச்சாட்டு.
எடுத்ததற்கெல்லாம் பக்கத்து மாநிலங்களை உதாரணமாக்கி அதைவிட நல்லது செய்வதாகக் கூறும் விடியா அரசு, இந்த சம்பள விகிதத்திலும் அண்டை மாநிலங்களை ஒப்பிட்டு தர வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது. குறைந்த அளவில் ஊதியத்தை வழங்கிவிட்டு கல்வியை இந்த அரசு எப்படி மேம்படுத்த முடியும் என்பதும், அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தினரின் கேள்வியாக உள்ளது.
மேலும், பெற்றோர் – ஆசிரியர் கழகங்கள் மூலம் கெளரவ விரிவுரையாளர்களை செய்யாமல், அந்த நியமனங்களை ஒழுங்கு படுத்த வேண்டும் என்பதும், சுயநிதி கல்லூரிகளில் போதிய ஊதியமின்றி பேராசிரியர்கள் வாடும் நிலையில் அவர்களுக்கும் ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும், என்பதும் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் கோரிக்கையாக உள்ளது.
தெய்வத்துக்கு முந்தைய ஸ்தானமான ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்யாமல், விடியா அரசு காலம் கடத்துவது என்பது எதிர்கால மாணவர்களின் கல்வியை கேள்விக்குள்ளாக்கும்.