தனிநபர் கணினிகளை கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கணினி மற்றும் செல்போன் தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்க உளவுத்துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு கடந்த மாதம் 20-ம் தேதி அனுமதி வழங்கியது.
அதற்காக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி மூலம் இந்த 10 அமைப்புகளும் எந்த அனுமதி இல்லாமலும் யாரை வேண்டுமானாலும் உளவு பார்க்கலாம். குற்றச் செயல்களை தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, இந்த செயல், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் தனிமனித உரிமையை பறிக்கும் செயல் என்பதால் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக 6 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.