எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர்களை விசாரணையின்றி உடனடியாக கைது செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்படும் நபர்களை விசாரணையின்றி கைது செய்வதற்கு தடை விதித்தும், கைதாகும் நபர்கள் ஜாமின் பெறும் வகையிலும் சட்ட விதிகளை திருத்தியும் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.
இதனையடுத்து இன்று இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை எந்தவித விசாரணையின்றி கைது செய்யலாம் என்றும், முன் ஜாமினை பொருத்தவரையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே முன் ஜாமின் வழங்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.