வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்ப்பதற்கு பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படி வெளிநாடு செல்வோருக்கு எந்த நாட்டில் அதிக சம்பளம் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?… சொல்கிறது இந்த செய்தி தொகுப்பு.
வெளிநாடு சென்று சம்பாதித்து செட்டில் ஆக வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. அப்படி வெளிநாடு செல்வோருக்கு சில நாடுகளில் சரியான வேலையும், போதிய சம்பளமும் கிடைப்பதில்லை. நிலைமை இப்படி இருக்கையில் உலகிலேயே வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் நாடாக சவுதி அரேபியா இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இசிஏ இண்டர்நேஷனல் கன்சல்டன்ஸி சமீபத்தியத்தில் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவித்துள்ளது. அதாவது சவுதி அரேபியாவில் நடுத்தர அளவில் மேலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 83,763 பவுண்டுகள் சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் இது ரூ.88.64 லட்சம் வழங்கப்படுகிறது. உலகிலேயே இந்தபணிக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் இதுவாகும்.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சராசரி சம்பளம் மூன்று சதவீதம் குறைந்திருந்தாலும் உலகளவில் இதுவே அதிகபட்ச சம்பளமாக இருக்கிறது. அதிக சம்பளம் வழங்கப்படுவதால் சவுதி அரேபியா வெளிநாட்டு பணியாளர்களுக்கு உகந்த நாடாக விளங்குகிறது.
அதே போல பிரிட்டனில் வரிகள் காரணமாக பணியாளர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் பணியாளர்களுக்கு ஏற்படும் செலவுகள் மிக குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பணியாளர்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் நகரங்களில் சிங்கப்பூர் 16 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது.
தரவுகளின் அடிப்படையில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் ஹாங்காங் மூன்று இடங்கள் முன்னேறி 5-வது இடத்தையும், ஜப்பான், இந்தியா, சீனா ஆகியவை உலகளாவிய தரவரிசையில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.