சிறைக்குள் இருந்த போது கொள்ளையடிக்க திட்டம் போட்டு, ஜாமீனில் வெளியே வந்து கொள்ளையடித்தவர்களை, 7 மாதங்களுக்கு பிறகு சிசிடிவி காட்சியின் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடியில் மளிகை கடை நடத்தி வருபவர் செல்வம். இவரது மனைவி அருணாதேவி. இவரும் கணவருக்கு உதவியாய் கடையை பார்த்துக் கொள்கிறார். மளிகை கடைக்கு மேலே முதல் மாடியில் இவர்களது வீடு உள்ளது. மளிகை கடையில் உள்ள சிறிய பீரோவில் பணம் மற்றும் நகைகளை வைப்பது இவர்களது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி இரவு, பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகையும் ஒரு லட்சம் ரொக்கமும் திருடு போனது. செல்வம் அளித்த புகாரின் பேரில், கடையில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கினர். எம்கேபி நகர் உதவி ஆணையர் அரிக்குமார் தலைமையிலான காவல்துறையினர், சென்னையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பல்வேறு குற்றவாளிகளின் புகைப்படங்களையும், சிசிடிவியில் பதிவான காட்சிகளையும் ஒப்பிட்டு விசாரணை நடத்தினர். அப்பொழுது வடபழனியை சேர்ந்த பிரபா என்பவரின் புகைப்படம் ஒத்துப் போனதை அடுத்து, தனிப்படை காவல்துறையினர் அவரை வடபழனி சிக்னல் அருகே வைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கோடம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தகுமார் மற்றும் சாய் கிருஷ்ணா ஆகிய மூவரும் செல்வத்தின் மளிகைக் கடையில் கொள்ளையடித்தது தெரியவந்தது. பின்னர் பிரபாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதை அடுத்து மூவரிடமும் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரபாவும், சாய் கிருஷ்ணாவும் சிறையில் இருந்த பொழுது, வியாசர்பாடியை சேர்ந்த இட்டாஅஜித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையில், அஜித், பிரபா, சாய் மூவரும் சேர்ந்து கொள்ளையடிப்பது குறித்து திட்டம் தீட்டியுள்ளனர். வடபழனி பகுதியில் எவ்வளவு நாட்கள் சிறு, சிறு கொள்ளையடிப்பீர்கள் என்று கூறி, வடசென்னை பகுதியில் எந்தெந்த பகுதியில் கொள்ளை அடித்தால் பெரிய அளவில் பணம், நகை கிடைக்கும் என அஜித் திட்டம் போட்டு கொடுத்துள்ளான். இதை வைத்து, சிறையிலிருந்து வெளியே வந்ததும் மளிகைக் கடையை கொள்ளையடிப்பது என முடிவு செய்தனர். ஆனால் அஜித்துக்கு ஜாமீன் கிடைக்காமல் பிரபா மற்றும் சாய்கிருஷ்ணனுக்கு மட்டும் ஜாமீன் கிடைத்துள்ளது. அஜித் வருவதற்குள் இவர்களிருவரும் ஆனந்தகுமார் என்பவனுடன் சேர்ந்து செல்வத்தின் மளிகை கடையை கொள்ளையடித்துள்ளனர். இரண்டு நாட்களாக இரு சக்கர வாகனத்தில் வந்து நோட்டமிட்டவர்கள், கொள்ளை நடந்த அன்று, ஆனந்தகுமார் இரு சக்கர வாகனத்தில் தெரு முனையில் காத்திருக்க, மற்ற இருவரும் கடப்பாரை உதவியுடன் சட்டரின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த பணம், நகையை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். மேலும் கொள்ளை அடித்த பணத்தை வைத்து சொகுசாக வாழ்ந்துள்ளனர். தங்களது காதலிகளுக்கும் இஷ்டத்திற்கு செலவு செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரும் வடசென்னையை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால், இவர்களை அடையாளம் கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு காலதாமதம் ஏற்பட்டாலும், 7 மாதங்கள் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி கொள்ளையர்களை கைது செய்து வழக்கை முடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 18 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, மூவரையும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.