சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்லலாம் என கடந்த செப்டம்பர் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் கோயில் நடை திறக்கப்பட்டபோது, இளம் பெண்கள் சிலர் கோயிலுக்கு செல்ல முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், கோயிலுக்கு வந்த பெண்கள் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனையடுத்து, சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும், மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது எனவும் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தடை ஏதும் இல்லை என தெரிவித்த உச்ச நீதிமன்றம், சீராய்வு மனுக்களை விசாரித்தாலும் முந்தைய உத்தரவுக்கு தடை ஏதும் கிடையாது என கூறியது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு ஜனவரி 22ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்துகிறது.
Discussion about this post