மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில், கோயில் நடை திறக்கப்பட்டது. பெண்கள் வர முயற்சிப்பதால், சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு காலத்துக்கான ஆயத்த பணிகள் நடைபெற்றன. தேவையான பொருட்கள் அனைத்தும், டிராக்டர் மூலம் கொண்டு வரப்பட்டன. இதனைத்தொடர்ந்து, மகரவிளக்கு பூஜைக்காக, இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, நடையை திறந்து தீபம் ஏற்றினார்.
மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி இளம் பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என தேவசம் போர்டு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், பெண்கள் அங்கு வர தொடர்ந்து முயற்சிப்பதால், பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில், ஜனவரி 5-ம் தேதி வரை, 144 தடை உத்தரவை நீட்டித்து, பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நவம்பர் முதல் ஜனவரி 15-ம் தேதி வரை மகர விளக்கு சீசனையொட்டி, நடை திறக்கப்படும்போது, நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை, கோவிலுக்கு வருவார்கள். ஆனால், தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தால், பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.