சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டை கண்டித்து இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்றையதினம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதை தடுக்கும் வகையில் ஐயப்ப பக்தர்கள் நிலக்கலில் குவிந்து அங்கு வந்த இளம் பெண்களை தடுத்து நிறுத்தினர். அப்போது ஐயப்ப பக்தர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து வகையிலும் அமல்படுத்த தயாராக இருக்கும் கேரள அரசை கண்டித்தும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் சபரிமலை கர்மா சமிதி அமைப்பின் சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சட்ட ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள காவல்துறை இயக்குநர் எச்சரிக்கைவிடுத்துள்ளார். இதனால் கேரளாவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.